×

மேகாலயா முதலமைச்சராக 2வது முறையாக கான்ராட் சங்மா பதவியேற்பு.. 2 துணை முதல்வர்கள், 12 அமைச்சர்களும் உறுதி மொழி ஏற்றனர்!!

ஷில்லாங்: மேகாலயா மாநில முதலமைச்சராக 2வது முறையாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா பதவியேற்றுக் கொண்டார். வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மேகாலயாவில் சட்டப்பேரவை தேர்தல் சமீபத்தில் நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை நேற்று முன்தினம் நடந்தது. இதில் திரிபுரா, நாகலாந்து இரு மாநிலத்திலும் பாஜ கூட்டணி ஆட்சியை தக்க வைத்தது. மேகாலயாவில், தேசிய மக்கள் கட்சி (என்பிபி), பாஜ கூட்டணி முறிந்து தனித்தனியாக போட்டியிட்ட நிலையில், 60 சட்டப்பேரவை தொகுதிகளில் என்பிபி கட்சி 26 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் தலா 5 இடங்களை கைப்பற்றின. பாஜ, எச்எஸ்பிடிபி, பிடிஎப் கட்சிகள் தலா 2 இடங்களில் வென்றன.

எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்காததால், என்பிபி கட்சி, பாஜ உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கேட்டது. இதைத் தொடர்ந்து, பாஜ உட்பட 34 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் மீண்டும் என்பிபி கட்சி ஆட்சியை தக்க வைத்தது. இதையடுத்து, அக்கட்சியின் தலைவர் கான்ராட் கே சங்மா ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இந்த நிலையில், மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ராஜ் பவனில் இன்று நடந்த பதவியேற்பு விழாவில் மேகாலயா மாநில முதலமைச்சராக 2வது முறையாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா பதவியேற்றுக் கொண்டார். கான்ராட் கே சங்மாவுக்கு ஆளுநர் பாகு சவுகாம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பிரஸ்டோன் டன்சோங் மற்றும் ஸ்னியாவ்பலங் தர் ஆகியோர் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டனர். அலெக்ஸாண்டர் லலு,அம்பரின் லிங்டோ, பால் லிங்டோ, கோமிங்கோன் உள்ளிட்ட 12 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கான இலாகா விரைவில் ஒதுக்கப்பட உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா ஆகியோர் கலந்து கொண்டனர். 


Tags : Kanrad Sangma ,Chief Minister ,Meghalaya , Meghalaya, Chief Minister, Conrad Sangma, Principals
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...